Pottuvil village

எங்கள் ஊர் பொத்துவில்

காரிருள் பிரியு முன்னே
கழனியை நாடித் தூய
ஏரிலே நெஞ்சைப் பூட்டி
இன்புறும் துணைவரோடு,
சீரிலே வாழும் மாதர்
சென்றுமே பணிகள் செய்து
பார்புகழ் கொழிக்க வாழும்
பண்பினர் வாழும் நாடு!

கொட்டிடும் மழை காலத்தும்
கோப்பையைக் கையிலேந்தி,
கட்டெழில் கயலின் கண்ணார்
கன்றினை அவிழ்த்துச் சென்று
இட்டமாயப் பால் கநற்து
இதமுறப் பதமுமேற்றி
பட்டினப் பகுதிக் கெல்லாம்
பால் கொடுப்போர் வாழ் நாடு!

ஏடுகள் கண்டி ராத
இன்கவி பிறக்கும் பூமி
கூடவே மூவினத்தோர்
கொள்கைகள் வாழும் பூமி,
தேடரும் வாவி மூன்றைத்
தன்னகம் கொண்ட தாலே
பாடகர் பாவில் போற்றும்
பொத்துவில் எங்கள் ஊரே!

1968.10.14ஆம் திகதி தினபதி பத்திரிகையில் வெளியான கவிதை.

அன்புடன் பொத்துவிலுக்கு அழைத்துச் செல்கின்றோம்…..

பொத்துவில், இலங்கையின் தென்கோடியில் அமைந்துள்ள இயற்கை அழகுகள் நிறையவே நிறைந்துள்ள அழகெழில் கொஞ்சும் கிராமமாகும். இது மூன்று பக்கம் நிலத்தினாலும் ஒரு பக்கம் கடலினாலும் சூழப்பட்டுள்ளது. பொத்துவிலின் சனத்தொகை 39196 ஆகும். இந்த ஊர் கொண்டுள்ள இயற்கை எழில்கள் எண்ணிலடங்காதவை. இவை பற்றிய தகவல்களையும் காட்சிகளையும் பகிர்ந்து கொள்ள எண்ணினோம். அதன் விளைவாக உறுப்பெற்றதே இந்த வலைப்பதிவு. இவ்வலைப்பதிவு பொத்துவில் பற்றிய தகவல்களை மட்டுமல்லாது, அங்கு இடம்பெறும் சமகால நிகழ்வுகள், அங்குள்ள மக்களின் சாதனைகளை உலகிற்கே அறிவிக்கும் ஓரூடகமாய் இது திகழப்போகின்றது. தொடர்ந்தும் இவ்வலைப்பதிவுடன் நீங்கள் இணைந்திருப்பீர்கள் என திடமாக நம்புகின்றோம். இது பொத்துவிலில் இரண்டு ஆண்டுகளாக செயற்பட்டு வரும் இன்டலெக்ட் இமேஜ் (Intellect Image) அமைப்பின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப அலகின் (ICT Unit) இன்னுமொரு முயற்சியாகும். அண்மையில் இன்டலெக்ட் இமேஜ் அமைப்பு அதன் ஈராண்டு நிறைவு விழாவினை கடந்த 2006.03.24 ஆம் திகதி வெகுவிமர்சையாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான செய்திகள் மற்றும் நிழற்படங்கள்; இன்டலெக்ட் இமேஜ் வெப் ப்ளாக்கில் (வலைப்பதிவில்) ஆங்கிலத்திலும் தமிழிலும் பதியப்பட்டுள்ளன. புதிய செய்திகள் பலவற்றுடன் விரைவில் மீண்டும் சந்திப்போம்….. தொடர்ந்தும் இணைந்திருங்கள்………